Blog Details

பணியிடத்தில் நம் மனநலம் – ஒரு பார்வை.

Nov 20, 2017 ahanacare

இந்தியா – உழைக்கும் மக்கள் அதிகம் வாழும் தேசம். இந்திய மக்கள் தொகையில் சுமார் 50% (65 கோடி) பேர் 20 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்கள். கிட்டத்தட்ட இவர்கள் அனைவருமே அவர்களின் வயதுக்கும் கல்வி, உடல் தகுதிக்கும் ஏற்ற ஏதேனும் ஒரு வேலையில் அல்லது தொழிலில் ஈடுபடுபவர்களாகத்தான் இருப்பர். இந்த வயதுக்கு கீழும் மேலும் உள்ளவர்களும் உழைக்கத்தான் செய்கிறார்கள் என்பது நமது தேசத்தின் மற்றுமொரு சோகம் ( அதை பெருமையாக கருத முடியுமா எனத்தெரியவில்லை). வேலையில்லாத் திண்ட்டாட்டம் ஒருபுறம் இருக்க தத்தம் பிழைப்புக்காக ஏதாவது ஒரு வேலையை நாம் அனைவரும் செய்து கொண்டுதான் இருக்கிறோம். எந்த வேலையாக இருந்தாலும் சரி, ஏன் அவர் பெரிய முதலாளியாக இருந்தாலும் சரி உழைப்பும் தத்தம் கடைமையும் என்பது அனைவருக்கும் பொதுவானதுதான். மாதச்சம்பளத்திற்கு ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பவரானாலும் சரி, இல்லை அந்த நிறுவனத்தை நடத்துபவரானாலும் சரி, அரசு வேலையில் இருப்பவரானாலும் சரி இல்லை அந்த அரசாங்கத்தை ஆள்பவராக இருந்தாலும் சரி அனைவரும் உழைத்துதான் ஆகவேண்டும். குடும்ப பெண்களுக்கும் இது பொருந்தும். சில குடும்ப பெண்கள் இரட்டை சுமை தாங்கிகள் என்பது மற்றுமொரு வேதைனையான விசயம். உழைப்பு என்பது மனதும் உடலும் ஒருங்கினைந்து செய்ய வேண்டிய ஒரு விசயம். ஒருவருடைய முழுமையான வேலைத்திறன் வெளிப்படுவது அவர் மனதாலும் உடலாலும் முழு ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டுமே சாத்தியம்.
ஒவ்வொருவரும் சராசரியாக நம் வாழ்வில் மூன்றில் ஒரு பங்கை நம்முடைய பணியிடத்தில் கழிக்கிறோம் (வாழ்கிறோம் என்பதே சரியாக இருக்கும்). அது எத்தகைய பணியடமாக இருந்தாலும் சரி ( விவசாயம் முதல், அரசு நிர்வாகம் வரை). நாம் அனைவரும் நம் மனதில் கை வைத்து கேட்க வேண்டிய ஒரு கேள்வி இந்த மூன்றில் ஒரு பங்கு வாழ்க்கையை நாம் எந்த அளவுக்கு திருப்தியாக பரிபூரணமாக சந்தோசமாக சுதந்திரமாக (பொருளாதார, பணிசார், பதவிசார் உயர்வு தாழ்வுகளை கடந்து) உணர்கிறோம் உணர்ந்திருக்கின்றோம்.
2016ல் ஆப்டம் என்ற ஒரு தனியார் நிறுவனம் நடத்திய -ஆய்வின்படி சுமார் 45% பணியாளர்கள் (பொறுப்பு வேறுபாடின்றி) ஏதோ ஒரு விதமான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது
. முக்கியமாக வேலைப்பளு சார்ந்த மனஅழுத்தம், தீவிர மனச்சோர்வு, மனப்பதற்றம், தற்கொலை எண்ணங்கள், மது மற்றும் போதைப் பழக்கங்கள், உடல் பருமன் அல்லது எடைக்குறைவு போன்ற பிரச்சனைகளாளும் பாதிக்கபடுகின்றனர். இது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிப்பதோடு மட்டுமின்றி, வேலைத்திறன், வேலை சார்ந்து முடிவெடுக்கும் திறன், உற்பத்தித்திறன், நாட்டின் பொருளாதாரம் வரை பாதிக்கிறது.
ஒவ்வொரு பணியாளரின் திறமைக்கும் சுய தேவைக்கும் நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்கும் இடைப்பட்ட இடைவெளியால் உண்டாகும் மன அழுத்தம் (stress) பெரும்பாலும் பணியாளரின் ஒட்டுமொத்த மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் மிக முக்கிய காரணியாக உள்ளது. மேலும் பணியடச்சூழல் ( தட்ப வெப்பம், சத்தம், வெளிச்சம், மாசு) பணிநேரம், ஊதியம், பணியாளர் நலன் போன்ற விசயங்களும் பணியாளரின் மன அழுத்தக் காரணிகாளாக உள்ளது. இவையல்லாது ஸ்திரத்தன்மையற்ற வேலைச்சூழலும், பணியாளரின் சொந்த பழக்கவழக்கங்களும், வாழ்வியல் முறைகளும் மன அழுத்த்திற்கு முக்கிய காரணிகளாகும். எல்லாவற்றையும் விட தான் மனதளவில் அவதிப்படுகிறேன் என்று வெளிப்படையாக சொல்ல முடியாத அளவுக்கு மன நல குறைபாடுகள் மீது உலக அளவில் இருக்கும் எதிர் மனோநிலை, மூட நம்பிக்கை மற்றும் ஒதுக்குதல் மிக மிக முக்கியமான காரணமாகும். மற்ற உடல் நல குறைபாடுகளைப் போல மனநல குறைபாடுகளின் மீதும் அக்கறையான பார்வை பொதுமக்களிடையே இல்லாதது மிகவும் வருத்தமளிக்கும் விசயமாகும். இவ்வாறு ஒரு பணியாளர் தனக்குள் துன்புறும் மனநிலையை வெளியில் சொல்லாமல் இருக்கும் பட்சத்தில் அதுவே பின்னர் மனஅழுத்தம், மனச்சோர்வு, தற்கொலை, உடல் சார் நோய்களுக்கு காரணமாகிறது.
பாதுகாப்பான, சந்தோசமான, சுயமரியாதையான வாழ்க்கையே சமநிலையான வாழ்க்கை ஆகும். இந்த மூன்றையும் ஒரு தனிமனிதனோ அவனுடைய குடும்பமோ அடைவதற்கு அவன் தன்னாலான எல்லா முயற்சிகளையும் ஆழ்மன அளவில் ஒவ்வொரு கணமும் செய்துகொண்டே இருப்பான். அதில் முக்கியமான ஒன்று பொருளாதார ஸ்திரம் மற்றும் தொழில் (அ) வேலை சார் அடையாளம். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இது பொருந்தும். அதை பேணிப்பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தனிமனிதனின், அவன் சார்ந்த நிறுவனத்தின் மற்றும் அரசின் கடமை.
மன ஆரோக்கியமில்லாது உடல் ஆரோக்கியம் நிச்சயம் சாத்தியமில்லை. ஒருவரின் மூளையில் சுரக்கும் ரசாயனங்களே உடலின் கோடிக்கனக்கான உயிர் செல்கள் எவ்வாறு இயங்க வேண்டும் என்று தீர்மானிக்கிறது. நம்முடை உளச்சமநிலை பாதிக்கப்படும் பொழுது, மூளையின் செயல்களும் பாதிப்படையும் அது பின்னாளில் பல உடல் நோய்கள் ஏன் மூளைச்சாவுவரை ஏற்பட காரணமாக அமையாலாம். ( சினிமா எடிட்டர் கிஷோர் இறப்புக்கு மனஅழுத்தம் ஒரு முக்கிய காரணம் என்பது நமக்கு நினைவிருக்கலாம்).
நம் அனைவருக்கும் தான் சார்ந்த துறையில் உச்சத்தை தொடவேண்டும் என்ற லட்சியம் இருக்கலாம். ஆனால் நம் அனைவரின் முதல் லட்சியம் நம்முடைய மன ஆரோக்கியத்தை காப்பதாக இருக்க வேண்டும். தினசரி சந்தோசமான வாழ்க்கையை தொலைத்துவிட்டு என்றோ ஒரு நாள் அடையும் வெற்றியில் எனக்கு நம்பிக்கையில்லை. அதேசமயத்தில் நம்முடையை வளர்ச்சிக்கான சரியான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்ளுதல் அவசியம்.
பணியடத்தில் மன ஆரோக்கியத்தை பேணும் சில வழிமுறைகள்:
1. நேர மேலாண்மை – குடும்பம் – தொழில் – சுயம் சார்ந்து நம்முடைய நேரத்த திட்டமிடல் மிக அவசியம்
2. தினசரி உடற்பயிற்சி – சரிவிகித உணவு
3. வருமானம் – செலவினம் இவற்றுக்கு இடையில் சமநிலை பேணுதல்
4. தன்னிலை அறிதல் – தன்னுடைய அறிவுசார் – உடல்சார் – பொருளாதாரம் சார்ந்த நிலையை அறிந்து அதற்கேற்ப புதிய முயற்சிகளில் ஈடுபடல் அல்லது பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளல்
5. நிறுவன தலைமகள் தங்களுடைய பணியாட்களின் மன உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்தல். மன நலம் சார்ந்த மூடநம்பிக்கைகளை ஒழித்தல்.