Blog Details

மின்னதிர்வு சிகிச்சை – நாம் அறிந்திடாத உண்மைகளும் பலன்களும்….( வாழ்வை மீட்டுத்தரும் மென்னதிர்வு சிகிச்சை)

Oct 10, 2017 ahanacare

திருசெல்வன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 27 வயது இளைஞனின் மிகச் சிறந்த அறிவியல் அறிவும், தகவல் தொழில் நுட்பத் திறமையும், நுட்பமாக சிந்தித்து புதிய மென்பொருள் செயலிகளை உருவாக்கும் திறனும் யாருக்கும் பயன் படாமல் போகக் கூடிய சூழல் ஒன்று உருவாகும் என்று அவரின் பெற்றோர்கள் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். ஆம். மனநோயின் உச்சபட்ச நிலை என்பது தன்னம்பிக்கை இழப்பதும் தற்கொலை முடிவும் அதை உடனே செயல்படுத்த விழையும் மூளைத்தூண்டலும் ஆகும். ஏனென்றால் அந்த ஒரு நிமிட செயலுக்கு பின்னால் அந்த உயிரே நினைத்தாலும் மீண்டும் இந்த பூமியில் வாழமுடியாது… திருசெல்வனின் நிலையும் கிட்டத்தட்ட அதுவாகத்தான் இருந்தது. சின்னதொரு உறவுச்சிக்கலில் ஆரம்பித்த அவரது மன உளைச்சல் நாளடைவில் தனக்கென்று யாருமில்லை என்ற கற்பனை நிலைக்கு எடுத்துச்சென்று இறுதியில் வேலையில் நாட்டமில்லாமல், எதிலும் கவனம் செலுத்த முடியாமல், தன்னையே பராமரித்துக்கொள்ளும் மனநிலையையும் இழந்து, நட்புகளை துறந்து, தனிமை வாழ்வையும், அதீத புகைப்பழக்கமும் சூழ்ந்த ஒரு வாழ்க்கையை பிடித்துகொண்டார். அவரின் மனது தன் வாழ்க்கை இன்னும் சிறிது நாட்கள் தான் என்னும் முடிவை எட்டியிருந்தது. இரண்டு மாத காலத்திற்குள், அவரின் மனபோக்கினை உணர்ந்த அவரது நண்பர்கள், பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, இறுதியில் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் தீவிர மனச்சோர்விலும், தற்கொலை எண்ணத்திலும் இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக மருத்துவ சிகிச்சையும் மற்றும் மனநல ஆலோசனையும் ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும் அவருடைய தற்கொலை எண்ணமும் வாழ்க்கை மீதான வெறுப்பும் முழுதாக நீங்கவில்லை. அவருடைய மன நிலையின் தீவிரத்தை புரிந்துகொண்ட மருத்துவர் அவருக்கு மின்னதிர்வு சிகிச்சை தேவை என்பதை உணர்ந்து அவரிடமும், பெற்றோர்களிடமும் சிகிச்சை முறை பற்றி எடுத்துரைத்தார். ஆனால் பெற்றோர்கள் மனதில் பயமும், மின்னதிர்வு சிகிச்சை பற்றிய தவறான புரிதலும் இருந்ததால் ஒப்புதல் வழங்கவில்லை. இறுதியில், மருத்துவ சிகிச்சையும், கவுன்சிலிங்கும் மட்டுமே கொடுத்து பெற்றோர்களுக்கு நோயாளியை எச்சரிக்கையுடன் கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அனால் அடுத்த சில நாட்களில் திருச்செல்வன் தற்கொலை முயற்சியில் ஈடுபட மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி செய்யப்பட்டு பின்னர் மனநல சிகிச்சைக்காக அனுமதிக்கப்பாட்டார். மனநல மருத்துவர் மீண்டும் அவர்களிடம் மின்னதிர்வு சிகிச்சையின் பயன்களை எடுத்துக் கூறி, நோயாளி மற்றும் பெற்றோர்களின் ஒப்புதலோடு சிகிச்சை வழங்கப்பட்டது. அதனோடு தொடர்ச்சியாக மருந்துகளும் கவுன்சிலிங்கும் வழங்கப்பட்டு மீண்டும் வாழ்வை விரும்பும், நேசிக்கும் அந்த பழைய திருசெல்வன் மெதுமெதுவாக மீட்கப்பட்டார். மூன்று மாதங்கள் கழித்து அவர் முதன் முதலாக சிரிக்கிறார்.

மின்னதிர்வுசிகிச்சை ஓர் பின்புலம்

சுமார் 75 ஆண்டுகளூக்கு முன்னால் எதேச்சையாக கண்டறியப்பட்டதே மின்னதிர்வு சிகிச்சை முறையாகும். மெல்லிய மின் அதிர்வினால் மயக்க நிலையை அடைந்து பின்னர் மீள்பவர்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து, பின்னர் மனநோய்களுக்கான ஒரு முக்கியமான மாற்று சிகிச்சை முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. நவீன கால மருந்துகள் இல்லாத அந்த காலகட்டத்தில், மனநோயாளிகளை அடைத்துவைத்தல், கட்டிப்போடுதல் போன்ற நீண்ட கால சிகிச்சை முறைகளில் இருந்து (பலனும் மிகக் குறைவு), சில தீவிர மனநலக் குறைபாடுகளுக்கு துரித நிவாரனியாக மின்னதிர்வு சிகிச்சை இருந்து வந்தது. தற்போதய நவீன மருத்துவக் காலகட்டத்திலும், மருந்துகளுக்குக் உடனடியாக கட்டுப்படாத, தீவிர மனநோய்களுக்கு, மின்னதிர்வுசிகிச்சை ஒரு முக்கிய தேர்வாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. மின்னதிர்வு சிகிச்சை அளித்து நோயாளின் நிலையில் முன்னேற்றம் எற்பட்ட பின்னரும் தொடர் மருந்துகளும், கவுன்சிலிங்கும் எடுத்தக் கொள்வது அவசியமான ஒன்றாகும்.

மின்னதிர்வு சிகிச்சை பற்றிய பல எதிர்மறை கருத்துகள் மற்றும் அது எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது.

மின்னதிர்வு சிகிச்சை குறித்து, அது ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் சில மாற்றுக்கருத்துக்களும், அது தொடர்பான தவறான புரிதல்களும் இருந்து வருகின்றன. குறிப்பாக, மின்னதிர்வு சிகிச்சை, மனநோயாளிக்கு ஒரு தண்டனையாக வழங்கப்படுவது போலவும், நோயாளி மிகுந்த வேதனைக்கு ஆளாவது போலவும், சிகிச்சைக்குப் பின்னர் அவர் நடைபிணமாக, அனைத்தையும் மறந்து உலவுவது போலவும், கிட்டத்தட்ட அனைத்து மொழி சினிமாக்களிலும் சித்தரிக்கப்பட்டு, மின்னதிர்வு சிகிச்சை மேல், பொது மக்களுக்கு ஒரு கடுமையான ஒவ்வாமையையும், வெறுப்பு மனநிலையும் ஏற்படுத்தப்பட்டுவிட்டது. இதனாலேயே மின்னதிர்வு சிகிச்சை என்றாலே, அனைத்து தரப்பு மக்களும், ஏன் சில மருத்துவக் குடும்பத்தை சேர்ந்தவர்களுமே அதற்கு ஒப்புதல் தர தயங்குகிறார்கள். இதனால் நோய் தீவிரமடைவதும், குணமடைதல் கால தாமதமாவதுமே ஏற்படுகிறது. சினிமாக்களி்ல் மின்னதிர்வு சிகிச்சையை, கரண்ட் ஷாக் மற்றும் எலக்டிரிக் ஷாக் என்ற பெயரில் குறிப்பிடுகிறார்கள். இது மக்களிடையே ஒருவிதமான பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சிகிச்சையின்போது நோயாளி அலறுவது, பயங்கரமாக துடிப்பது போலவும் சி்த்தரிக்கப்பட்டு காண்பிக்கப்படுகிறது. இது மேலும் மக்களுக்கு இந்த சிகிச்சை மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
உண்மையில் இச்சிகிச்சை முறை மிகுந்த பாதுகாப்பானதும், நீண்ட கால பக்கவிளைவுகள் அல்லாததும் இதன் சிறப்பம்சமாகும். தீவிர தற்கொலை எண்ணங்கள், மனச்சோர்வு, மன எழுச்சி, மனப்பிறழ்ச்சி மற்றும் மனச்சிதைவு நோய்களிலிருந்து மீட்க இச்சிகிச்சை முறை பெரிதும் பயன்படுகிறது. மேலும் கர்ப்பினிப் பெண்கள், பாலூட்டும் பெண்களுக்கு மனநலக்குறைபாடு ஏற்பட்டாலோ, சில வயதானவர்களுக்கு அதிகம் மருந்துகள் வழங்க இயலாத நிலையில் இச்சிகிச்சை ஒன்றே நோயிலிருந்து மீட்க சிறந்த வழியாகும்.
மின்னதிர்வுசிகிச்சையில் சில தற்காலிக பக்க விளைவுகள் இருப்பது உண்மைதான். முதலில் நாம் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். பக்க விளைவுகள் இல்லாத மருத்துவம் என்பதே கிட்டத்தட்ட ஒரு பொய்யான கருத்தியலாகும். எந்த ஒரு சிகிச்சை முறையிலும் இருவகையான விளைவுகள் உண்டு. ஒன்று நாம் எதிர்பார்த்த விளைவு. அதாவது நோய்க்கான தீர்வு. மற்றொன்று நாம் எதிர்பாராத தேவையற்ற விளைவுகள். அவையே பக்கவிளைவுகள் என்று கருதப்படுகிறது. நவீன மருத்துவத்தில் மிகக் குறைந்த பக்கவிளைவுகள் அல்லது பக்கவிளைவுகள் அல்லாத மருத்துவமே குறிக்கோளாக இருப்பினும், நாம் முதலில் கவனிக்க வேண்டியது நோயின் தீவிரமும், அதற்கான முதன்மைத் தீர்வையும் தான். இச்சிகிச்சை முறையில் சில தற்காலிக பக்கவிளைவுகளாக சில நோயாளிகளுக்கு மறதியும், உடல் சோர்வும் சிகிச்சைக்கு பிந்தய ஓரிரு நாட்களுக்கு இருக்க வாய்ப்புள்ளது.
முதலில் மின்னதிர்வு சிகிச்சை என்பது நாம் நினைப்பது போல வழக்கமான வீட்டில் ஓடும் மின்சார அளவை போல பேரதிர்வினை உண்டாக்கும் மிகை மின் அழுத்தம் அளிக்கப்படும் சிகிச்சை அல்ல. ஒரு சாராசரி மனிதன் கையால் தொட்டு உணரக்கூடிய அளவிலான மிகச்சிறிய மின்னூட்டமே சில மில்லிசெகண்டுகள் நோயாளிக்கு மயக்க நிலையில் செலுத்தப்படும். வித்தியாசம் என்னவெனில் இது நேரடியாக மூளைக்கு செலுத்தப்படுகிறது. அவ்வளவே. முதலில் மனநோயினால் பாதிக்கப்பட்டவரது நோயின் தீவிரம் மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலில் மருந்து சிகிச்சையும், கவுன்சிலிங்கும் தொடங்கப்படும். பின்னர் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவும், நோயாளியின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் நோயாளியிடம் ஒப்புதல் பெறப்பட்டு மின்னதிர்வு சிகிச்சை மேற்கொள்ளப்படும்.