இயற்கை அதிசயங்களின் கூடாரம். பூமியின் தோற்றம் முதல் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி தொட்டு இன்றைய நவீனக் காலம் வரை பல்வேறு விசித்திரங்களும் அதிசயங்களும் ஏற்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது. நான் அதிசயம் என்று கூறுவது இயற்கையின் வழியிலிருந்து பார்த்தால் அது ஒரு சாதாரண பரிணாம மாற்றத்தின் நிகழ்வுகள் தான். மனிதர்களாகிய நாம் தான் அதை அதிசயமாகவோ அல்லது விசித்திரமாகவோ பார்க்கிறோம்.
அப்படிப்பட்ட இயற்கையின் உயிர் பரிணாமவியலின் ஒரு வகை மனிதப் பண்புகளிலும் உணர்வுகளிலும் ஏற்படும் மாற்றம் தான் மூன்றாம் பாலினத்தவர் என்று நாம் சொல்லக்கூடிய திருநங்கைகள் ஆவர். மீண்டும் ஒருமுறை நினைவு கூர்கிறேன். இவ்வகை பரிணாமவியலின் மாற்றங்கள் என்பது இயற்கையின் விதிகளுள் மிகச்சாதாரணமானது. ஆனால் மனிதனின் பார்வையில்…?
இயற்கையாக ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்து அந்த பாலினத்துக்குரிய உடலமைப்பையும் குணங்களையும் பண்புகளையும் அப்படியே பெற்று வளரும் வாழும் மனிதர்கள் 99.5%. ஆனால் இயற்கையாக ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்து அதே பாலினத்துக்குரிய உடலமைப்பையும் பெற்று ஆனால் மனதாலும் குணத்தாலும் தன்னை ஒரு ஆணாகவோ பெண்ணாகவோ உணரமுடியாமல் மனதால் தன்னை மாற்றுப்பாலினத்தவராக உணரும் மனிதர்கள் 0.5% ஆகும். உலக அளவில் இந்த சதவிகித அளவு சற்று மாறுபடலாம். ஆனால் இந்த மனித மூளையில் ஏற்படும் உணர்வு மாற்றம் முற்றிலும் இயற்கையானது. ஆனால் இந்த 99.5% சதவிகித மனிதர்களின் பார்வையில் 0.5% மனிதர்கள் எப்படி தெரிகிறார்கள். அவர்களுக்கு இந்த சமூகத்தில் கிடைத்திருக்கும் அங்கீகாரம் என்ன? மரியாதை என்ன?
உளவியலில் சமூக பாகுபாடு (Social Discrimination) என்றொரு சொல் உண்டு. அதாவது சக மனிதனை மற்றொரு மனிதன் எப்படி பாலினத்தால், சாதியால், மதத்தால், இனத்தால், நிறத்தால், பணத்தால், அறிவால் பிரித்துப் பார்க்கிறான் என்பதை விளக்கும் உளவியல் பிரிவு அது. ஏதோ ஒரு வகையில் சக மனிதனை மற்றொரு சக மனிதன் தாழ்த்தியும் உயர்த்தியும் பார்க்கும் நிலை உள்ளது. அது அவசியமா? அப்படி பாகுபாடு பார்த்தால் தான் ஒரு மனிதன் உயிர் வாழ முடியுமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. ஆனால் அவ்வாறு சக மனிதனைப் பிரித்து வைப்பதில் ஏதோ ஒரு வகையில் தன்னை மற்றவனை விட உயர்வானவன் என்று நினைத்துக்கொள்வதில், தான் வாழும் போக்குதான் சரி என்று நினைத்துக்கொள்வதில் ஒருவகை ஆழ்மன பூரிப்பு ஏற்படுகிறது. அதை நாம் நியாயப்படுத்திக்கொள்ளவும் செய்வோம்.
ஒரு நிமிடம் கண்ணை மூடி நினைத்துப்பாருங்கள். உங்களைச் சுற்றியிருக்கும் மனிதன் (அது பாலினத்தால், சாதியால், மதத்தால், இனத்தால், நிறத்தால், பணத்தால், அறிவால் எப்படிப்பட்ட வித்தியாசம் உள்ளவராக இருந்தாலும்) உங்களுக்கு உறவானவன், நட்பானவன் நம்பிக்கைக்குரியவன் என்று இருந்தால் உங்கள் வாழ்க்கை இன்னும் மகிழ்வாகப் பாதுகாப்பாகத் தானே இருக்கும். நீங்கள் என்னைக் கேட்கலாம், எதிரி என்று இருந்தால் தானே மனித வளர்ச்சி சாத்தியப்படும் என்று. மனித வளர்ச்சிக்கும் தேவை எதிரிகள் அல்ல. போட்டியாளர்கள். உங்கள் போட்டியாளனை நீங்கள் எதிரியாக நினைக்க தேவையில்லை. அதே சமயம் சிற்சில மனிதக் கருத்து வேறுபாடுகள் இருப்பதும் இயற்கையாகவே எங்கும் நடப்பது தான். ஆனால் ஒருவரை அவரின் பிறப்பாலும் இயற்கையான உடல் அமைப்பாலும் பிரிப்பது என்பது நிச்சயம் தேவையில்லை தானே?
இங்கு தான் நான் மேலே கூறிய மூன்றாம் பாலினத்தவர் மீது சக மனிதர்களாகிய நமக்கிருக்கும் வேற்றுமை உணர்வு முக்கியத்துவம் பெறுகிறது. அந்த பெரும்பான்மை சமூகத்தின் வேற்றுமை உணர்வால் அவர்கள் ஒதுக்கப்படும் போது வேறு வழியின்றி அவர்கள் வாழ்வதற்காகத் தேர்ந்தெடுக்கும் பாதை அவர்களை இன்னும் வேற்றுமைப் படுத்தி பொதுச்சமூகத்திலிருந்து இன்னும் அந்நியப்படுத்தி தூரப்படுத்தி விடுகிறது. அவர்களின் பாலின உணர்வு மட்டுமே மாறியிருக்கிறதே தவிர அவர்களும் மற்ற ஆசைகளும் ஏக்கங்களும் சக மனிதர்களைப் போல் ஒன்றுதான்.
என்னிடம் சிலர் கூறுவது உண்டு. அவர்கள் எல்லாம் மிக மோசமானவர்கள், திருடர்கள் என்று. அவர்களிடம் நான் கேட்கும் கேள்வி.? நீங்கள் சொல்லும் சராசரி மனிதர்களில் எல்லோருமே நல்லவர்களா? உளவியலில் இதற்குப் பொதுமைப்படுத்துதல் (Generalization) என்று பெயர். அதாவது நம்மிலிருந்து மாறுபட்டவர்களைத் தவறாகச் சித்தரிக்கும் மனநிலை. ஆனால் உண்மையில் ஒருவன் தவறு செய்தால் அவனுடைய வாழ்க்கைப்பின்னனியை மட்டுமே கேள்வி கேட்க வேண்டும். அதைவிடுத்து அவன் சார்ந்த சமூகத்தையே தவறாகப் பொதுமைப்படுத்துவது முற்றிலும் தவறான சிந்தனை.
இங்குக் கெட்ட மனநிலையும் குற்ற மனநிலையும் உள்ள மனிதர்கள் எல்லா சமூகப்பிரிவிலும் உண்டு. அதே போல் நல்ல குணமுள்ளவர்களும் இரக்கக் குணமுள்ளவர்களும் எல்லா சமூகத்திலும் உண்டு.
நிறத்தாலும் குணத்தாலும் ஆசைகளாலும் தேர்வுகளாலும் பிறப்பாலும் பிறப்பின் அடையாளங்களாலும், உடலமைப்பாலும், உணர்வுகளாலும் எத்தனை வித்தியாசங்கள் இருந்தாலும் நாம் அனைவரும் மனிதர்கள் என்று ஒற்றை அடையாளத்தைச் சுமப்பவர்கள்.
ஆகவே மனிதம் போற்றுவோம்… மானுடம் பேணுவோம்…பல்லுயிர் போற்றுவோம்… இயற்கை போற்றுவோம்…