Safety Parenting

Courtesy: Mr. Gopi Rajendran, Senior Consultant Psychologist

Safety Parenting
பெற்றோர்களே – குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்….

மனிதன் ஒரு சமூக விலங்கு என்று சொல்வார்கள். நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் வாழ்ந்தாக வேண்டும். ஆனால் நம்மோடு வாழ்பவர்களை நமக்கு அருகில் இருப்பவர்களை நம்பமுடியாமல் போனால். அந்த ஒரு நொடியை நினைத்துப்பாருங்கள். என்னால் என்னை சுற்றி இருப்பவர்களை நம்ப முடியவில்லை என்ற ஒரு நிலையை ஒரு நொடி நினைத்துப்பார்த்தாலே மனம் பதறுகிறது.

மனித சமூகத்தில், அரோக்கியமான சந்தோஷமான நிம்மதியான பாதுகாப்பான வாழ்க்கை என்பது அவன் ஒருவன் நினைத்தால் மட்டும் இயலாது. அவன் சார்ந்து வாழும் சமூகத்தின் ஒவ்வொரு சக மனிதனுக்கும் அடுத்த சக மனிதனின் அரோக்கியத்தில் மகிழ்ச்சியில் நிம்மதியான வாழ்க்கையில் பெரும் பங்குண்டு. இங்கு தனியோரு சாமான்யனோ, பணக்காரனோ தன்னிச்சையாக அனைத்தும் பெற்று வாழ்ந்துவிட முடியாது. ஆனால் நிதர்சன உலகில் இந்த உண்மை நம்மில் பலருக்கு தெரியாத ஒன்று. நம்பிக்கை சார்ந்து வாழ வேண்டிய நாம் அனைவரும், நம்மை சுற்றியுள்ள சக மனிதர்களையே நம்ப முடியாத அளவிற்கு இன்றைய வாழ்க்கைச் சூழல் மாறிக்கொண்டுள்ளது. சமீபத்திய நிகழ்வான 12வயது காது கேளாத குழந்தைக்கு, தான் தினந்தோறும் சந்திக்கும் மனிதர்களால் நிகழ்த்தப்பட்ட பாலியல் கொடுமையை அறிந்த பிறகு “நாங்கள் யாரைத்தான் நம்புவது “ எனக் கதறி அழுத ஒரு அன்னையின் மனவலியை உணர்ந்ததால் இதை இங்கு நான் மிக முக்கியமாக குறிப்பிடுகிறேன்.

கற்காலம் தொட்டு மன்னராட்சி காலம் முதல் இன்றைய மக்களாட்சி காலம் வரை மனித சமூகத்தில் மாறாத ஒரு கெட்ட குணம் உண்டு என்றால் அது எளியவனை வலியவன் அடக்கி தனக்கான தேவையை ஆசையை தீர்த்துக்கொள்வது. எளிய விலங்குகளை வலிய விலங்குகள் வேட்டையாடுவது சகஜம் தானே. நாமும் விலங்குகளின் அப்டேட்டட் வெர்ஷன் என்பதாலோ என்னவோ, நமக்குள்ளும் அக்குணம் வேரூன்றி உள்ளது. எளியவன் என்றால் வெறும் உடலால் மட்டும் எளியவன் என்பதல்ல. உடலால், மனதால், சமூகப் பிரிவுகளால், பொருளாதார வேற்றுமைகளால், அதிகாரத்தால் இங்கு பெரும்பான்மையானோர் எளியவர்களே. எளிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யாத எந்த ஒரு தேசமும் தன்னை வளர்ந்த தேசமாகவோ வல்லரசு தேசமாகவோ, மக்களின் தேசமாகவோ அழைக்கமுடியாது.

குழந்தையின் மீதான பாலியல் வன்கொடுமைக்கும், வலியவன் எளியவன் அடக்குமுறைக்கும் என்ன தொடர்பு என நீங்கள் யோசிக்கலாம். இது ஒரு இச்சை தொடர்பானதுதானே என நீங்கள் கருதலாம். ஆம் இது இச்சை சார்ந்ததுதான். ஆனால் அது நிகழ்த்தப்பட்டது உடலாலும் மனதாலும் ஒரு எளிய உயிரின் மீது. தனக்கு விருப்பமில்லை என சொல்லமுடியாத உயிரின் மீது. தன்னால் எதிர்த்து சண்டையிட முடியாத உயிரின் மீது. ஓர் குரலறுந்த பிஞ்சின் மீது.

மீண்டும் முதல் பகுதிக்கு வருவோம். இந்த குழந்தை வளர்ந்து வரும்போது ஆண்கள் மீதான எண்ணம் எவ்வாறு இருக்கும். இந்த குழந்தை யாரை நம்பும். எதிர்காலம் பற்றிய சிந்தனை என்னவாக இருக்கும். நட்பு, காதல், காமம் உறவு வாழ்க்கை பற்றிய சிந்தனை என்னவாக இருக்கும். பெற்றோர்களின் மனநிலையை நினைத்துப் பாருங்கள். நாளை அவர்கள் யாரை நம்பி தன் குழந்தையை விட்டுச்செல்வார்கள். ஒரு நொடியில் இந்த சமூகம் ஒரு குடும்பத்தின் நம்பிக்கையை, எதிர்காலத்தை கனவுகளை ஏன் அந்த தலைமுறையையே சிதைத்துவிட்டது.

ஒவ்வொரு நிமிடமும் நம் நாட்டில் இத்தனை பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்ற செய்தியை நாம் அன்றாடம் காண்கிறோம். நான் இங்கு புள்ளிவிவரங்களை அடுக்க விரும்பவில்லை. ஏனெனில் புள்ளிவிவரங்களால் மக்கள் மனதில் பெரிய மாற்றம் நிகழும் என முக்கியமாக இந்த விசயத்தில் எனக்கு தோன்றவில்லை. புள்ளிவிவரங்கள் அரசுகளுக்குத்தான் மக்களுக்கல்ல. புள்ளிவிவரங்களை கண்டு “இவ்ளோ பெரிய நாட்டில் இதெல்லாம் சாதாரணமப்பா” என சொல்பவர்களும் இங்குண்டு.

இந்நிகழ்வில் நாம் அனைவரும் கவனிக்கின்ற ஒரு விசயம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல்களை மட்டுமே. நாம் அனைவரும் கவனிக்கத்தவறிய ஒரு முக்கியமான விசயம் ஆண்குழந்தைகளும் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாவதுதான். மேலே குறிப்பிட்டது போல, பாலியல் துன்புறுத்தல்கள் என்பது வெறும் இச்சை சார்ந்தது மட்டுமல்ல, அது எளியவன் மீது வலியவன் நடத்தும் உளவியல் அடக்குமுறை. தனிமை இச்சை பலம் குரூரமனம் இந்த நான்கும் ஒன்று சேரும் போது எதிரில் இருப்பவர் யார் என்பது முக்கியமல்ல.

இது போன்ற இக்கட்டான ஒரு காலச்சூழலில், குழந்தை வளர்ப்பு என்பது ஒரு பெரும் மனப்போராட்டம். சுதந்திரமான வாழ்க்கையை விட பாதுகாப்பான வாழ்க்கை மிக முக்கியம் என இத்தகைய சூழல்கள் நமக்கு உணர்த்துகிறது.

பெற்றோர்களே… உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். விழிப்புணர்வோடு இருங்கள்.

குழந்தை வளர்ப்பில் நாம் கவனிக்க வேண்டியவை..

  • குழந்தைகளின் மெளன மொழியை முதலில் புரிந்து கொள்ளுங்கள்
  • ஆண் குழந்தையோ பெண்குழந்தையோ இருவரும் அனைத்திலும் சமம் என்பதை மெல்லிய சொற்களால் அறிவுறுத்துங்கள் (தன் குடும்பத்திலேயே அதை நிகழ்த்துங்கள்)
  • தன் குழந்தையோடு தொடர்புடைய அனைவரின் (உறவினர்கள், டிரைவர், அக்கம் பக்கத்தினர், மற்ற தொழிளார்கள்) தனித்துவங்களையும் சமரசமின்றி புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
  • குழந்தைகளின் பாதுகாப்பு விசயத்தில் மிகவும் உறுதியுடன் இருங்கள்
  • அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் சமரமின்றி பின்பற்றுங்கள்

எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது, நீங்கள் வலியவனாகும் போது எளியவனை நேசிக்கவேண்டும் என்ற பேருண்மையை கற்றுக்கொடுங்கள்.

  • உடல்பலத்தால் வலியவன்
  • மனபலத்தால் வலியவன்
  • பணபலத்தால் வலியவன்
  • அதிகாரபலத்தால் வலியவன்
  • சமூகபலத்தால் வலியவன்

என நாம் அனைவரும் ஏதோ ஒருவகையில் வலியவர்களே. அதில் எளியவர்களை நேசித்தால் மட்டுமே குற்றமற்ற சமூகம் உருவாகும்.