Blog Details

ரியாலிடி ஷோ – ஒரு பார்வை

Dec 4, 2017 ahanacare

நவீன அறிவியல் உலகம் நம்முடைய அன்றாட வாழ்வை பலவிதமான கொண்டாட்டங்களில் திளைக்கச்செய்கிறது என்றால் அது மிகையல்ல. விளையாட்டுக்களும், கொண்டாட்டங்களும், திருவிழாக்களும், கேளிக்கைகளும் மனிதன் கூடி வாழத்தொடங்கிய கற்காலம் தொட்டே இருந்து வருகிறது. பரிணாம வளர்ச்சிற்கேற்ப, நம் கேளிக்கைகளின் வடிவங்களும் மாறிக்கொண்டே வருகின்றன என்பதுவும் உண்மை. நவீன அறிவியல் உலகின் ஆகச்சிறந்த பொழுது போக்கு அம்சம், தொலைக்காட்சி என்றால் அது மிகையல்ல. மனிதனை வீட்டுச்சிறையில் சுகமாக கட்டி வைத்த பெருமை தொலைக்காட்சியையே சாரும். காட்சி ஊடகம் ( visual media) எனும் இந்த துறை நாம் தேடிச்சென்று தெரிந்துகொள்ள வேண்டிய, கற்றுக்கொள்ள வேண்டிய அனைத்தையும் நாம் இருக்கும் இடத்தில் விரல் நுனியில் கொண்டு வந்து அடைத்துவிட்டது என்றே சொல்லலாம். இன்றைய நவீன பொழுது போக்குகளில் முக்கியமான பங்கு வகிப்பது கிட்டத்தட்ட அனைத்து தொலைக்காட்சி ஊடங்களிலும் வரும் ரியாலிடி ஷோ எனும் அனைவரும் பங்கு பெற வழிகாட்டும் நேரடி போட்டி நிகழ்ச்சிகளாகும். சில நடிகர்களின் நாடகங்களை ரசித்து வந்த காலம் மாறி நம் அனைவரையும் நடிகர்களாக்கிய பெருமை இந்த நிகழ்ச்சிக்கு உண்டு.
ரியாலிடி ஷோ எனும் இந்நிகழ்ச்சியின் ஒற்றை சூத்திரம் ( தந்திரம் என்று கூட சொல்லலாம்) “அனைவரும் பங்கு பெறலாம் வெற்றி பெறலாம் புகழ் பெறலாம்” என்பதாகும். புகழுக்கு மயங்காதொருவர் உண்டோ?. ஆரம்ப காலத்தில், தொழில் முறை நடிகர்களே தங்களுக்குள் இது போன்ற சுய விளம்பர நிகழ்ச்சிகளை நடத்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி வந்தனர். பின்னர் அது மெல்ல மெல்ல பொது மக்களிடம் நகர்ந்து இன்று சிறு குழந்தைகள் கூட பங்கு பெறும் நிகழ்ச்சியாக அது மாற்றப்பட்டுவிட்டது என்பதே உண்மை. இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் சிலர் என்றால் காண்பவர்கள் கோடி. உளவியல் நிபுனர்களின் கவலை, இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் சில குழந்தைகளின் மனநிலையும், அதை ஏக்கத்துடன் காணும் லட்சம் குழந்தைகளின் மனநிலையும் என்னவாகும் என்பதே. வெற்றி ஒன்றே இலக்கு எனும் கண்மூடித்தனமான ஒருவித உளவியல் பேரழுத்தத்தையும், வெற்றி பெறுபவர்களுக்கே வாழ்க்கை எனும் சிக்கிலான மூடத்தனமான கருத்தியலையும் பிஞ்சு குழந்தைகளின் மனதில் பின் விளைவுகள் எதையும் உணராமல் இது போன்ற நிகழ்ச்சிகள் பதிய வைத்துவிட்டுச் செல்கின்றன என்பது மிகவும் கசப்பான உண்மை. இதனால் வெற்றிக்காக அவர்கள் செய்யும் அனைத்து தந்திரங்களையும், மூர்க்கத்தனமான சில குணங்களையும் எவ்வித குற்ற உணர்ச்சியற்ற மனநிலையும், தோல்விகளை சகிக்க இயலாத சமநிலையற்ற உணர்ச்சிவயப்பட்ட மனநிலையையுமே இறுதியில் இது போன்ற காட்சி ஊடகங்களின் நிகழ்ச்சிகளின் வாயிலாக குழந்தைகள் பெறுகின்றனர்.
பிறக்கும் போதே எந்த ஒரு மனிதனும் மிகப் பெரிய சிந்தனையாளனாகவோ, அறிவியலளானாகவோ, தலைவனாகவோ, அனைத்தும் உணர்ந்த ஞானியாகவோ, ஏன் குற்றவாளியாகவோ கூட பிறப்பதில்லை. நாம் அனைவரும் அழுகை எனும் உணர்ச்சியோடு ஏதும் அறியா குழந்தைகளாகவே இந்த பூமியில் பிறந்தவர்கள் தாம். பிறக்கும் போதே சில நுண்ணறிவு சார்ந்த தனித்திறமைகளோடு நாம் பிறக்கிறோம் என்பது உண்மையானாலும், நம்முடைய வாழ்வின் மகிழ்ச்சியை, வெற்றியை தீர்மானிப்பது என்னவோ நம்முடைய வாழ்வில் நாம் கற்கும் அனுபவங்கள் தான். குறிப்பாக குழந்தைப்பருவம் மற்றும் வளரிளம் பருவ கற்றல் மற்றும் அனுபவங்கள் நம்முடைய குணத்தை, நன்னடத்தைகளை, நம்பிக்கைகளை நிர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
“The Child is the father of the Man” என்று வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் எனும் ஆங்கிலேய கவிஞரின் கூற்று குழந்தைப்பருவம் ஒரு மனிதனின் வாழ்வில் எத்தகைய பெரும்பங்கு வகிக்கிறது என்பதை மிகச்சிறப்பாக உணர்த்துகிறது. கடந்த நூறாண்டு கால உளவியல் துறையின் ஆராய்ச்சியின் முடிவுகளில் இருந்து கற்றலே (Learning) ஒரு மனிதனின் வாழ்வை தீர்மானிக்கிறது என்பதை பல கட்டங்களில் பல உளவியல் பேராசிரியர்கள் எடுத்துரைத்துள்ளனர். இங்கு கற்றல் என்பது கல்விக்கூடங்களில் பாடப்புத்தகங்களில் மட்டும் கற்கும் சில ஏட்டுச்சூத்திரங்கள் அல்ல. ஒவ்வொரு நொடியும் நாம் வாழும் சூழலில் இருந்து நாம் எடுத்துக்கொள்ளும் பாடம் ஆகும்.
நாம் அனைவரும் அழுகை, கோபம், பயம், சிரிப்பு எனும் சாதாரண உணர்ச்சிகளோடு ஏதும் அறியா குழந்தையாகவே பிறக்கிறோம். நம்முடைய சிந்தனைத்திறன், முடிவெடுக்கும் திறன், குணநலன்கள் யாவும் நாம் வளரும் சூழலில், நாம் தினந்தோறும் காணும், பழகும் மனிதர்களிடம் இருந்தும், அன்றாட நிகழ்வுகளில் இருந்தும், நம்முடைய அனுபவங்களில் இருந்துமே வளர்கிறது. கொடுத்து உதவும் குணம் முதல் கொடூரமாக தாக்கும் குணம் வரை அனைத்தும் இங்கு இளம் பருவ கற்றலின் வெளிப்பாடே. நம்முடைய பெரும்பாலான குணநலன்கள் இளம் வயதில் நம்முடைய அன்றாட வாழ்வின் சூழல், பழகும் மனிதர்கள், காணும் விசயங்கள், காண்பிக்கப்படும் விசயங்கள், மனதை அழுத்தும் நெருக்கடிகள் ஆகிய அனைத்தாலும் இணைந்து தீர்மானிக்கப்படுகிறது.
உண்மையில் ரியாலிடி ஷோக்கள் முழுக்க முழுக்க நிதர்சனமான ஒன்று அல்ல. அதில் பங்கு பெறுபவர்களின் உணர்வுகள் மிகைப்படுத்தப்பட்டு, வெற்றியோ, தோல்வியோ, மகிழ்ச்சியோ, துக்கமோ சினிமா உலகின் தொழில் முறை கற்பனைகள் கலந்து வியாபார ரீதியில் மிகைப்படுத்தட்டு காண்பிக்கப்படுகிறது. ஆனால் அதை பிரித்தரியும் பக்குவம் இல்லாத குழந்தைப்பருவ மனது, அந்த கற்பனை உலகில் நிஜமாக வாழத்தொடங்குகிறது. பெற்றோரும் அந்த ஊடக உலகின் அங்கீகாரமே வாழ்க்கையின் வெற்றி என்று தங்கள் பிள்ளைகள் மீது அவர்களின் சக்திக்கு மீறிய, அவர்களுக்கு விருப்பமில்லாத,
அவர்களால் முடியாத விசயங்களையும் அவர்கள் மீது திணிக்கத்தொடங்குகிறார்கள். வெற்றி பெறும் ஒரு குழந்தை, அதில் பங்கே பெறாத லட்சம் குழந்தைகளின் மனதில் ஒருவித தாழ்வு மனப்பான்மையை விதைத்து விட்டு செல்கிறது.
இத்தகைய திணிக்கப்பட்ட போட்டி உலகில் விழித்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களே. இளம் வயதிலேயே சாதிப்பதால் ஒரு குழந்தையின் வாழ்க்கை சுபிட்சம் ஆகிவிடாது. சந்தோசமான, பாதுகாப்பான, ஆரோக்கியமான வாழ்க்கையே ஒரு மிகப்பெரும் வெற்றிதான். ஊடக வெளிச்சம் ஒரு சிறு அடையாள ரீதியிலான ஒரு நிகழ்வு மட்டுமே. அதனால் வாழ்க்கையே வெற்றி பெற்றதாக கருத முடியாது.
வளரும் குழந்தைகள் அறிவியல் ரீதியாக கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. சீரான பள்ளிக்கல்வியும், இதர திறமைகளை வளர்த்துக்கொள்ளுதலும், சமூகத்தோடு இணைந்து பழகும் திறனும் சிறப்பான வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றாகும். இளம் வயதில் நல்ல குணங்களை கற்றுக்கொடுத்து விட்டால், வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் வெற்றிதான், வாழ்க்கையே கொண்டாட்டம் தான்.
காண்பவையும் காண்பிக்கப்படுபவையும் நல்லவைகளாக இருக்குட்டமே.