Blog Details

கற்றல் குறைபாடு – புத்திசாலி குழந்தைகளின் இருண்ட பக்கம்…

Sep 7, 2018 ahanacare

9 வயதான அஸ்வின் நகரின் முதன்மையான ஒரு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறான். LKG – UKG மற்றும் 1ம் வகுப்பு வரை வகுப்பில் நல்ல மாணவன், விரைவாகப் பதில் சொல்லக்கூடியவன் என்று பெயரெடுத்த பையன் அடுத்தடுத்த வருடங்களில் சரியாக வீட்டுப்பாடம் எழுதுவதில்லை, வகுப்பில் ஒழுங்காக கவனிப்பதில்லை, டியூஷன் வகுப்புகளுக்கும் செல்வதில்லை எதைக்கேட்டாலும் கோபப்படுகிறான் போன்ற பிரச்சினைகள் வர ஆரம்பித்தது. அஸ்வினை உளவியல் நிபுணர் பரிசோதித்த பொழுது அவனுக்கு வாசிப்பு மற்றும் எழுத்துப்பிழை குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டது. 1ம் வகுப்பு வரை பெரும்பாலும் சொல்லிக்கொடுத்து கேள்வி கேட்கும் பருவம் என்பதால் அவனால் சுலபமாக பதில் சொல்ல முடிந்தது. மேற்கல்வி செல்லும் போது அவனால் வாசிக்க எழுத சிரமம் இருப்பதால் அனைத்துப் பிரச்சினைகளும் ஏற்பட்டது என்பது புரிந்தது. 6 மாத கால சிறப்பு பயிற்சிக்குப் பின்னர் அஸ்வினால் தற்போது விரவாக வாசிக்க முடிகிறது. மேலும் பயிற்சியை தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய பெற்றோர்களின் முதன்மையான கவலை தன் குழந்தைகளின் கல்வி என்று சொன்னால் அது மிகையல்ல. வாழ்க்கை என்னும் ஓட்டப்பந்தையத்தில் தன் பிள்ளைகள் வெற்றி பெற வேண்டும் என்று சொன்னால் அதற்கு கல்விதான் முதன்மையான வழி என்று ஒவ்வொரு பெற்றோரும் நம்புவது கிட்டத்தட்ட 100% உண்மை. ஆனால் இயற்கை வேறுமாதிரியானது. 10ல் 4 குழ்நந்தைகள் கல்வியில் ஏதோ ஒரு வகையில் பின் தங்கி இருக்கிறார்கள். இந்த குழந்தைகள் அனைவரும் பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி ஏதோ ஒரு வகையில் அவமானத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதுதான் வேதனையிலும் வேதனை. மேலும் ஒரு உண்மை என்ன தெரியுமா. 10 ல் 7 சிறார் குற்றவாளிகள் கற்றல் குறைபாடு உள்ளவர்கள். அவர்கள் பள்ளியிலும் வீட்டிலும் சந்திக்கும் மன அழுத்தம், யாரும் தன்னை அங்கீகரிக்காத நிலையில் சேரக்கூடாதவர்களுடன் சேர்ந்து இறுதியில் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

உண்மையில் ஏன் அவர்களால் படிக்க முடியவில்லை… கற்றல் குறைபாடு என்றால் என்ன?

கற்றல் குறைபாடு என்பது ஒரு குழந்தையின் பிறப்பிலேயே ஏற்படும் மூளையின் மொழி மற்றும் கற்றல் சார்ந்த விசயங்களை பிரித்தறியும் தன்மையில் உள்ள திறன்சார் குறைபாடு ஆகும். விளையாட்டு, பழக்கவழக்கங்கள், பேச்சாற்றல், சிந்தனைத்திறன் என அனைத்து விசயங்களிலும் இவர்கள் சிறந்து விளங்கினாலும் கல்வி கற்றலில் மட்டும் பின்தங்குவர். பொதுவாக இக்குறைபாடு பள்ளியில் 2ம் வகுப்பு அல்லது 3ம் வகுப்பு முதல் தெரிய ஆரம்பிக்கும். கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு பொதுவாக பேச்சாற்றலும் ஒரு விசயத்தை கேட்டு புரிந்து கொள்ளும் தன்மையும் நன்றாக இருக்கும். ஆனால் ஒரு செய்தியை படித்துப் புரிந்து கொள்ளும் தன்மை இருக்காது. மேலும் இவர்களுக்கு கணித அறிவும் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. இதன் முக்கிய காரணம் நம் ஒவ்வொருவருடைய மூளையிலும் மொழி உணர் பகுதியில் (அதாவது ஒரு மொழியின் பேச்சுவழக்கு, எழுத்துவழக்கு ஆகியவற்றை புரிந்துணரும் பகுதி) எழுத்துக்களை அர்த்தமுள்ள சொற்களாக மாற்றி அதை புரிந்து பின்னர் மனதில் பதியவைக்கும் திறனில் ஏற்படும் குறைபாடு ஆகும்.
இன்னும் சற்று புரியும் படி சொன்னால், தமிழ் மட்டுமே படித்து வளர்ந்த நீங்கள் திடீரென ஒருநாள் ஹைதராபாத் செல்ல நேர்ந்தால் அங்கு அனைத்து கடைகளின் போர்டுகளிலும் தெலுங்கு மொழியில் எழுதி இருப்பதை பார்க்கும் போது உங்களுக்கு எப்படி ஒரு மனநிலை இருக்கும் (நடிகர் விவேக் ஒரு படத்தில் கூறியது போல ஜிலேபியை பிய்த்து போட்ட மாதிரி உங்களுக்குத் தெரியும் அல்லவா). அதே மனநிலைதான் ஒரு குழந்தைக்கு தன்னுடைய சொந்த தாய்மொழியின் சொற்களை உணருவதிலேயே சிரமம் இருக்கும். தாய்மொழியே சிரமம் என்னும் பொழுது, ஆங்கிலம் அவர்களுக்கு இன்னும் சிரமமாக இருக்கும்.
கீழ்க்கானும் குறிப்புகளை கவனியுங்கள்…. இது கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் முழு மனதோடு முயற்சித்து எழுதியது. இதுதான் அவர்களின் நிலை. அவர்கள் நடிக்கவில்லை…. விளையாடவில்லை…. திமிருக்கு செய்யவில்லை…. படிப்பில் ஆர்வமில்லாமல் இல்லை…. வெற்றி பெறும் ஊக்கம் இல்லாமல் இல்லை….. இதுதான் அவர்களின் நிலை….அவர்களுக்கு வழக்கமான கல்விமுறையில் படித்துப் புரிந்து கொள்வது என்பது மிகுந்த சிரமமானது.
 
Dyslexia
Dyslexia
Dyslexia
கற்றல் குறைபாடு குறிப்பாக நான்கு வகைப்படும்.

  1. வாசித்தல் மற்றும் புரிந்துகொள்ளுதல் குறைபாடு
  2. எழுத்துப்பிழை குறைபாடு
  3. தெளிவாக எழுதுதல் குறைபாடு
  4. கணிதக் குறைபாடு

 
கற்றல் குறைபாடு உலகம் முழுக்க அனைத்து மொழி பேசும் குழந்தைகளுக்கும் உள்ள அடிப்படை மூளைத் திறன் சார்ந்த பிரச்சினை ஆகும். கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள் கல்வியில் பின் தங்கினாலும் இவர்களின் சிந்தனைத் திறன் அபாரமாக இருக்கும். இவர்களின் கற்பனை வளம் மிகிச்சிறந்து காணப்படும். பல அறிவியல் விஞ்ஞானிகள் கற்றல் குறைபாடு உள்ளவர்களே. மிகச்சிறந்த விளையாட்டு வீரர்கள் யாவரும் கற்றல் குறைபாடு உள்ளவர்களே. உதாரனமாக ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன், அபிஷேக் பச்சன், சச்சின் டெண்டுலகர்…
கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளை ஆரம்ப வயதிலேயே கண்டறிந்து அதற்கான சிறப்பு பயிற்சிகளை அளிப்பது அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும். குறைந்தது 6 மாதம் முதல் 2 வருட கால தொடர் தீவிர சிறப்பு பயிற்சி அளித்தால் முட்டுமே அவர்கள் இக்குறைபாட்டிலிருந்து மீண்டு மற்றவர்களைப் போல வாசிக்க எழுத முடியும். இப்பிரச்சினைக்கான சிறப்பு பயிற்சிகளை மேற்கொள்ளும் அதே வேளையில் அவர்களின் தனித்திறன் என்ன என்பதை கண்டறிந்து அதை ஊக்குவித்தலும் நன்மை பயக்கும். கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளை ஆரம்ப வயதிலேயே கண்டறிந்து அதற்கான சிறப்பு பயிற்சிகளை அளிப்பது அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும். குறைந்தது 6 மாதம் முதல் 2 வருட கால தொடர் தீவிர சிறப்பு பயிற்சி அளித்தால் முட்டுமே அவர்கள் இக்குறைபாட்டிலிருந்து மீண்டு மற்றவர்களைப் போல வாசிக்க எழுத முடியும். இப்பிரச்சினைக்கான சிறப்பு பயிற்சிகளை மேற்கொள்ளும் அதே வேளையில் அவர்களின் தனித்திறன் என்ன என்பதை கண்டறிந்து அதை ஊக்குவித்தலும் நன்மை பயக்கும்.
பெற்றோர்களின் கவனத்திற்கு…
1. கற்றல் குறைபாடு நோயல்ல… அது ஒரு நிலை… மூளை செல்களின் பிணைப்பில் உள்ள குறைபாடு. சீரான பயிற்சிகள் மூலம் மட்டுமே அதை சரி செய்ய முடியும். அதிக நேரம் டியூசன் வைப்பதாலோ, அடிப்பதினாலோ அதை சரி செய்ய முடியாது
2. ஒவ்வொரு குழந்தையும் தன் பெற்றோர்களிடத்தும் ஆசிரியர்களிடத்தும், தன் உறவினர்களிடத்தும், தான் சார்ந்து வாழும் சமூகத்திலிருந்தும் ஒரு அங்கீகாரத்தினை எதிர்பார்க்கும். கல்வியல்லாது எந்த ஒரு நல்ல விசயத்தைச் செய்தாலும் அதை பாராட்டுங்கள். சிறு அங்கீகாரம் ஒரு குழந்தையின் எதிர்காலத்தையே மாற்றும் வல்லமை உடையது. அது யாரிடம் இருந்து கிடைக்கிறது என்பதையும் பொருத்தது. இக்குழந்தைகளே பின்னாளில் சமூக விரோதிகளின் கையில் சிக்கி தானும் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
3. குறைகளை கண்டிக்கும் அதே வேளையில் குறைகளை கடந்து அனைத்து நிறைகளையும் பாராட்டிக்கொண்டே இருங்கள். பாராட்ட கூச்சப்படாதீர்கள்.
4. கல்வி என்பதைத் தாண்டி, சமூக அறிவு, பொது அறிவு, மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மை, அன்பு செலுத்தும் குணம், விடாமுயற்சி ஆகியன முக்கியம்.
5. ஏட்டுக்கல்வியை விட வாழ்க்கைக் கல்வி முக்கியம். அன்பு சார் உலகில் வாழக் கற்றுக்கொடுங்கள்.