Blog Details

அடம் பிடிக்கும் குழந்தைகள்

Sep 17, 2018 ahanacare

“எனக்கு அதுதான் வேண்டும்., இப்பவே வேண்டும்., இப்பவே வாங்கித்தாங்க” உச்ச குரலில் ஒரு 7 வயதுக் குழந்தை அடம்பிடித்துக் கத்துவதை சமீபத்தில் ஒரு பெரிய மாலில் 100 பேருக்கு நடுவில் காண நேர்ந்தது. சங்கடத்தோடு, குரல் உயர்த்திப் பேசும் குழந்தையை செய்வதறியாது பார்த்து நின்றிருந்தனர் அவனின் பெற்றோர்கள். இது பல வீடுகளில் நடக்கும் அன்றாட நிகழ்வாகி வருகிறது. பெற்றோர்கள் தன் குழந்தையை பற்றிக் கூறும்போது “எங்களுக்கு என்ன செய்றதுன்னே தெரியலை” “ இப்படி நடக்கும்போது நிறைய அவமானமா இருக்கு” “ நான் சொல்றத கேட்கவே மாட்டேங்குறான்” என்று வருத்தப்பட்டு வருத்தப்பட்டுக் கூறுகிறார்கள். இக்கால குழந்தைகளுக்கு என்ன ஆயிற்று!!! ஏன் இவ்வளவு அடம்? பெற்றோர் பல வழிகளில் முயன்றும் தோற்கும் நிலை ஏன் வந்தது?
நம் குழந்தை பருவத்து நிகழ்வுகள் சிலவற்றை நினைவு கொள்வோமே! எனக்கு இன்றும் நினைவு இருக்கிறது. “வாட்ச்” வேண்டும் என்று என் தந்தையிடம் கேட்டபொழுது அவர் 10 வயதில் உனக்கு எதுக்கு வாட்ச்? தேவையில்லை என்று கூறி முடித்தார். அவ்வளவு தான் அதற்கு மேல் எவ்வளவு கேட்டாலும் கிடக்காது. இரண்டு வருடம் கழித்து திரும்பவும் நானும் என் அண்ணனும் அப்பாவிடம் கேட்டோம். நீண்ட நேரம் யோசித்த என் அப்பப் பின்னர் பரிட்சையில் முதல் 10 ரேங்க்கிற்குள் எடுத்தால் வாங்கித் தருகிறேன் என்றார். முட்டி மோதி, 10 வது ரேங்க் எடுத்து, நானும் என் அண்ணனும் வாட்ச் பெற்ற அந்த நாள் இன்றும் என் மனதில் மகிழ்ச்சியை தருகிறது. எவ்வளவு பெருமையாக அந்த வாட்சை பாதுகாத்தேன் என்று என் மகனிடம் இன்றும் கூறுவேன். பல நேரங்களில் கேட்டது கிடைக்கவே செய்யாது. அதையும் ஏற்றுக்கொள்வோம்.
இன்று நம்மில் பலர் என்ன செய்கிறோம்? நமக்கு நமது பெற்றோர்கள் தர மறுத்ததை நம் குழந்தைகளுக்கு தருவதாக எண்ணி பலவற்றை செய்கிறோம். குழந்தை ‘கேட்டவுடன்’ அல்லது ‘கேட்கும் முன்னரே’ தந்து மகிழ்விக்கிறோம். இதனால் குழந்தை என்ன கற்கிறது? நாம் நினைத்ததை/கேட்டதை உடனே நம் அம்ம அப்பா வாங்கித்தருவார்கள் என்று குழந்தையின் மனதில் பதிகிறது.
அன்றாட வாழ்க்கையில், பெற்றோரால் குழந்தையின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்ற இயலாது. ஒரு கட்டத்தில் ‘கிடையாது’ ‘வேண்டாம்’ என்றும் பெற்றோர் கூறும் பொழுது அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அழுது அடம் பிடிக்கிறார்கள். உடனே பரிதாபப்பட்டு அம்மா/அப்பா வாங்கிக்கொடுக்க குழந்தை அடுத்த பாடத்தை கற்கிறது. அது அழுது அடம்பிடித்தால் கட்டாயமாக கிடைக்கும் என்பது ஆகும். இப்பொழுது ஒவ்வொரு முறையும் அழுது அடம் பிடித்தே சாதிக்க கற்றுக்கொள்கிறது. ஒரு கட்டத்தில் பெற்றோரின் தகுதிக்கு மீறிய பொருள்/ஆசை என்று வரும் பட்சத்தில் வீடே ஒரு பெரிய போர்க்களமாகிப்போகிறது. அச்சமயத்தில் குழந்தைகளின் “சாப்பிடமாட்டேன் வீட்டை விட்டு ஓடிப்போயிருவேன் செத்துப்போயிருவேன் “ என்பன போன்ற மிரட்டல்கள் வரும்போது பொற்றோற்கள் செய்வதறியாது உறைந்துபோகின்றனர்.
“இப்பொழுதே” “ உடனே வேண்டும்” என்ற மனநிலையில் வளரும் குழந்தைகள் பிற்காலத்தில் மனச்சோர்வு, மனப்பதற்றம், போதைப்பொருளுக்கு அடிமையாதல் போன்ற மனநல பிரச்சினைகளால் அவதிப்பட நேர்கிறது.
இதற்குத் தீர்வுதான் என்ன?
நம் பெற்றோர் நமக்குக் கற்றுக்கொடுத்ததுதான்…. அது காத்திருத்தல் அல்லது பொறுமையாக இருக்கப் பழகுதல். கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள் அதாவது ஆக்கப் பொறுத்தவன் ஆறவும் பொறுக்க வேண்டும் என்று. அந்தப் பண்பு வாழ்விற்கு மிக முக்கியம் ஆகும். இதை எப்படி வளர்க்கலாம்?.

  1. குழந்தைகள் ஒன்றைக் கேட்கும் பொழ்து முதலில் அது அவசியமா என்று பார்க்க வேண்டும். விருப்பத்தைற்கும் அவசியத்திற்க்கும் உள்ள வேறுபாட்டினை முதலில் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பின்னர் குழந்தைகளின் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றாமல் முதலில் அவசியத்தை நிறைவேற்றப் பழக்க வேண்டும்.
  2. ஏமாற்றம் தோல்வி அவமானம் துரோகம் இந்த 4 விசயங்களையும் தன் வாழ்வில் சந்திக்காத மனிதன் இருக்க முடியாது. நாம் விரும்பாமல் நமக்கு நிகழும் வலிகள் இவை. சிறுவயது முதலே நம் குழந்தைகள் சிறு சிறு ஏமாற்றங்களுக்கும் தோல்விகளுக்கும் உட்பட்டு அதில் மனதிடத்துடனும் நிதானத்துடனும் சிரித்த ஏற்றுக்கொண்ட மனநிலையுடனும் வெளியே வரக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
  3. காத்திருந்து ஒரு விசயத்தை அடையும் போது அதன் மதிப்பைக் குழந்தைகள் உணர்வர்.
  4. எப்பொழுதுமே பெற்றோர்கள் செய்யும் ஒரு தவறு என்ன என்றால் ஒற்றைச் சொல்லால் குழந்தைகளின் வாயை அடைத்து விடுவது. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். புரிதல் என்பது அனுபவத்திலும் கற்றலிலும் இருந்துதான் வரும். எந்த ஒரு விசயத்தையும் குழந்தைக்கு அதன் மொழியில் தெளிவாக புரிய வையுங்கள். பெற்றோர்களே முதல் ஆசிரியர்கள். நீங்கள் தான் உங்கள் குழந்தைக்கு அனைத்தையும் சொல்லி புரியவைக்க வேண்டும்.
  5. குழந்தைகளுக்குத் தெரிந்தது இரண்டுதான். அது “ வேண்டும் வேண்டாம்” “பிடித்திருக்கிறது பிடிக்கவில்லை” ஆதலால் நாம் தான் அவர்களுக்கு “விருப்பத்திற்கும் அத்தியாவசியத்திற்கும்” “ஆசைக்கும் தேவைக்கும்” உள்ள வித்தியாசத்தை உணர்த்த வேண்டும்
  6. மனிதன் ஒரு சுகவாசி. நாம் அனைவரும் சுகவாழ்வு வாழவே ஆசைப்படுகிறோம். ஆனால் அதற்கான முயற்சியும் சரியான திட்டமிடலும் வேண்டும். குழந்தைகளுக்கு உழைப்பின் அவசியத்தை உணர்த்துவது நம் ஒவ்வொருவரின் கடமை.
  7. குழந்தைகளை நிதானமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் மனிதர்களாக வளர்ப்பது நம் கையில் தான் உள்ளது.